அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய தனது கடமைகளை நிறைவேற்றுமாறு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த பின்னணியில் சபாநாயகர், பிரதமர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்துடன் தொடர்புடைய பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறும், நிதி அமைச்சின் செயலாளரை நாடாளுமன்றத்திற்கு அழைக்குமாறும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கிடையில், திறைசேரியின் செயலாளரை வரவழைக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும், நிதி ஒதுக்கீட்டிற்கான முன்மொழிவுகளை முன்வைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் எதிர்கட்சியினரிடம் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகின்றது.