தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரங்களை வழங்குவதில் தடை ஏற்பட்டால், அரச நிறுவனங்களுக்கு தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்பட்டால் நிதி அமைச்சின் அனுமதியைப் பெற்று தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் சட்டச் சபைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மருந்து, எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை கடன் கடிதங்கள் இன்றி கொள்வனவு செய்ய முடியாது என்பதால், நிதி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் அபாயம் பொதுமக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.
இதன்படி, முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, அவசரநிலை ஏற்பட்டால் தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும் பராமரிப்பதற்கும் அரச நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.