தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரேக்கத்தில் சரக்கு ரயிலுடன், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணிக்கு, ஏதென்ஸிலிருந்து ஹெலெனிக் ட்ரெயின் நிறுவனத்தைச் சேர்ந்த பயணிகள் ரயில் தெஸாலோனிகி நகரிலிருந்து லரிஸா நகரை நோக்கி வந்த சரக்கு ரயிலுடன், டெம்பி ஊராட்சிப் பகுதியில் இரவு 11.24 மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
350 பயணிகளுடன் பயணித்த இந்த ரயிலில், விபத்தில் சிக்கி 85பேர் காயமடைந்த நிலையில், 50 முதல் 60 பேரை காணவில்லை என முதலில் கூறப்பட்டது.
ஆரம்பத்தில் 36பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்ததால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், முதல் 2 பெட்டிகள் தீப்பிடித்து ஏறத்தாழ முற்றிலும் அழிந்துபோனதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக லரிஸா நகருக்கு அருகே உள்ள ஒரு ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கோஸ்டாஸ் கரமான்லிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ரயில் விபத்துக்கு ரயில்வே ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அரசு புறக்கணிப்பைக் கண்டித்து ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.