இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்குமாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண மீனவர்சார் பிரச்சினைகள் குறித்து, யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்துக்கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்தி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்தனர்.
போராட்டம் நடைபெறவுள்ள திகதி தொடர்பில் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.