நான்கு சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக, போலந்து அறிவித்துள்ளது.
இதன்மூலம் கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்த பிறகு உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பிய முதல் நேட்டோ நாடாக போலாந்து மாறியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் குறித்த போர் விமானங்கள் அனுப்பப்படுமென போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் வான் பாதுகாப்பிற்கு இது வரவேற்கத்தக்க ஊக்கம் என்றாலும், கூடுதல் ஜெட் விமானங்கள் போரில் தீர்க்கமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
உக்ரைன் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் ஓலேனா கோண்ட்ராட்யுக், மேலும் பல நாடுகள் இதை பின்பற்றும் என நம்புவதாக கூறினார்.
உக்ரைனிய விமானிகள் பறக்க பயிற்சி பெற்ற சோவியத் காலத்து விமானங்களை அனுப்ப மற்ற நேட்டோ நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.
உக்ரைன் முன்னர் மேற்கத்திய நாடுகளிடம் எஃப்-16 போன்ற நவீன போர் விமானங்களை கோரியது. ஆனால், அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு ஜெட் விமானங்களை அனுப்புவதை ஜனாதிபதி பைடன் முன்பு நிராகரித்தார்.
இதேவேளை, நேட்டோ தரநிலை விமானங்களில் உக்ரைன் விமானிகளுக்கு பிரித்தானியா, பயிற்சி அளித்து வருகிறது.