சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் அழைப்பை ஏற்று ரஷ்யா செல்லும் சீன ஜனாதிபதி, 22ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதியின் பயணத்தை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த பயணத்தின் போது ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் ஸி ஜின்பிங், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன ஜனாதிபதியின் வருகை குறித்த அறிவிப்பை, ரஷ்ய அரசாங்கமும் உறுதிப்படுத்தியள்ளது. சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பின் எதிர்காலம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் நேரில் ஆலோசனை நடத்துவார்கள் என ரஷ்ய அரசாங்கம் கூறியுள்ளது.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவை தனிமைப்படுத்த அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் முயற்சி செய்து வரும் சூழலில், அந்த நாட்டுடனான உறவை மேம்படுத்தும் வகையில் சீன ஜனாதிபதியின் இந்த பயணம் அமையவுள்ளது.