உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அனுமதி கோரி சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கோரும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்கும் மற்றுமொரு முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதேபோன்ற பொறிமுறையை மாதிரியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க தேர்மனைக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.
யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அத்தகைய அமைப்பின் நன்மைகள் தீமைகள் குறித்து இருவரும் அங்கு கலந்துரையாடியுள்ளனர்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் 21 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை விசாரிக்க தனித்தனி பெஞ்ச்களில் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.