சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பின் போது இணக்கப்பாட்டு ஒப்பந்த ஏற்பாடுகளை பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஏற்பாடு கடந்த மார்ச் 22ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விவாதம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆரம்பமான நிலையிலேயே விவாதத்தின் இறுதி நாளான இன்று தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன.
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் இதற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதுதொடர்பான தீர்க்கமான நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.
எதிர்தரப்பினைப் பிரதிநிதித்துவப்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒப்பந்தத்தில் காணப்படும் கடுமையான நிபந்தனைகளை ஏற்க முடியாது எனவும், எனவே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அத்தோடு, மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் இதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பினை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் எதிர்தரப்பினரதும் ஆதரவுடன் பெரும்பான்மையுடன் ஒப்பந்த ஏற்பாடுக்கான நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.