பாகிஸ்தானில் உள்ள மன்சேரா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இலவச கோதுமை மா விநியோகத்தின் போது நிர்வாகத்தால் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தகுதியான குடும்பங்களுக்கு இலவச மா வழங்கப்படுவதாக குறிப்பிட்ட கிராம மக்கள் சில குழுக்கள் இப்பகுதியில் உள்ள விநியோக நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக மாவை எடுத்துச் சென்றன என்றும் கூறினர்.
ஜுல்லோ கிராம சபையின் மௌலானா வக்கார் அகமது கூறுகையில், ‘மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட மா விநியோகஸ்தர்களுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு குழு, எனது கிராமத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச மாவைப் பெற்றுள்ளது’ என்றார்.
கிராம மக்கள் மற்றும் உள்ளட்சி பிரதிநிதிகள் குழுவுடன் வந்த அஹ்மத், தகுதியான குடும்பங்கள் மா விநியோக நிலையங்களை அடைந்தபோது, அவர்களுக்கு மா வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஜுல்லோ, போஹ்ராஜ் மற்றும் பாசுந்த் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பெஷாவரில் உள்ள மா விநியோக மையத்திற்கு வெளியே பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விநியோக மையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த பொலிஸார் மீது மக்கள் கற்களை வீசித் தாக்கினர்.
ஹயதாபாத் நகர விளையாட்டு மைதானத்தில் அரசுத் திட்டத்தின் கீழ் இலவச கோதுமை மாவைப் பெறுவதற்காக மக்கள் நுழைய முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
பொலிஸ் அதிகாரியின் கூற்றுப்படி, 200-250 பேர் நுழைந்த பிறகு ஒரு கும்பல் மைதானத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றது.
மக்கள் மைதானத்திற்குள் நுழைய விடாமல் பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். அவர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர்.
மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர் என்றார்.
இதற்கிடையில், இலவச மா விநியோகத்தில் ஊழல், முறைகேடுகள் மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியவற்றைக் குற்றம் சாட்டி, பஜவுர் பழங்குடியினப் பகுதியின் உத்மான்கேல் தாலுகாவில் ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.