எந்தவொரு ஒப்பந்தத்தின் பெயராலும் உழைக்கும் மக்களின் உரிமைகளை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உழைக்கும் மக்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் போஷிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட தேசத்தில் 137வது சர்வதேச தொழிலாளர் தினத்தை இலங்கையர்கள் கொண்டாடுகின்றனர்.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை நினைவுபடுத்தும் வகையில் இலங்கை இன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடுகின்றது.
உலகில் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்துடன் மீளக் கட்டியெழுப்பப்பட்டதுடன் இலங்கையும் அவ்வாறு விரைவில் மீண்டெழும்.
எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு விவசாயிகள் முயற்சி எடுத்துள்ளனர். அவர்கள் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதில் முன்னிலை வகிக்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு துறையிலும் புதிய எழுச்சி ஏற்பட்டது. எனவே, உலக தொழிலாளர் தினத்தில், நாங்கள் இருந்ததை விட சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபட வேண்டும்.
அரசாங்கம், முதலாளி மற்றும் பணியாளர் என்ற முத்தரப்பு உரையாடல் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களும் முன்னேற வேண்டும்.
உழைக்கும் மக்களுக்கு நாம் பல வெற்றிகளை வழங்கியுள்ளோம். இந்த உலகத் தொழிலாளர் தினத்தில், அந்த வெற்றிகளின் அடிப்படையில் நாட்டை வளரும் பொருளாதாரம் கொண்டதாக மாற்றுவோம்.
இதற்கு எதிரான சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம், உரிமைகளைப் பாதுகாத்து நமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.