அமெரிக்காவினால் அண்மையில் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னகொட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் தன்னை கறுப்புப் பட்டியலில் இணைத்த தீர்மானத்தின் மூலம், தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக கறைபடாத அரச பணியில் நான் பெற்ற கௌரவம் மற்றும் நற்பெயரை இந்த தவறான குற்றச்சாட்டுகள் கடுமையாக தன்னை பாதித்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஐ.சி.சி.பி.ஆர். இன் 17வது பிரிவின் கீழ் எனது உரிமைகளை நேரடியாக மீறுவதாக உள்ளது என்றும் இதற்காக பரிகாரம் தேடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் முன்னாள் கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடை விவகாரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும் இது ஊடகங்களில் வெளியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றது என்ற தவறான பிரச்சாரத்திற்காக தான் இந்த விவகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த கரன்னகொட குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அமெரிக்காவின் முடிவு இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் வசந்த கரன்னாகொட அக்கடிதத்தில் கூறியுள்ளார்.