2019ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) காலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்யுய வேண்டும் என்ற சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு அனுமதியை வழங்கியுள்ளார்.
2019 டிசம்பர் 16 அன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த வழக்கில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்ட பின்னர், அவர் டிசம்பர் 30 அன்று தலா 500,000 ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள செயின்ட் பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு அருகில் இருந்து தான் கடத்தப்பட்டதாகவும், நவம்பர் 25 ஆம் திகதி வெள்ளை வேனில் வந்த ஆயுதம் ஏந்திய குழுவினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் முறைப்பாட்டை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.