தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 8.6 மில்லியன் கிலோ கடலட்டை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட திட்டம் 36000 ஏக்கருக்கும் அதிகமான கடலை உள்ளடக்கியது. 10 ஆண்டுகால இந்த திட்டமானது ஆண்டுக்கு 5000 ஏக்கர் மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாழ்.மாவட்டத்தில் மட்டும் 264 கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக 103 கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்குவதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
இவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் அண்மைய காலத்தில் கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கும், தீவகத்திற்கும் விரிவடந்து செல்கின்றது.
2014ஆம் ஆண்டு அரியாலையில் குயிலன் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்த சீனா கடலட்டைகளை இனப்பெருக்கம் செய்யும் நிலையமாக மாற்றி கடந்த 9 வருடங்களாக அதனை தொடர்ச்சியாக செயற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கடலட்டைக் குஞ்சுகளே ஏனைய பண்ணைகளுக்கு அனுப்பபட்டு வளர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. அதாவது, வடமாகாணம் முழுவதும் கடலட்டைக் குஞ்சுகளை விநியோகிக்கும் கேந்திர நிலையமாக குறித்த நிறுவனமே உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில், கடலட்டைப்பண்டைகள் தீவிரமாக விஸ்தரிக்கப்பட்டு வருவதால், கடல் வளம் கடுமையாக பாதிக்கிறது என்று சூழலியளாளர்கள் சுட்டிக்காட்டி வருவதோடு, மரபுரீதியான மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலைமைகள் அதிகரித்துச் செல்கிறது.
குருநகர், கொழும்புத்துறை, பாசையூர், மணியத்தோட்டம், கொய்யாத்தோட்டம், மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி, வேலணை, பருத்தித்தீவு மற்றும் புங்குடுதீவு ஆகிய பகுதிகளிலேயே காணப்படும் பெருமளவான கடலட்டைப் பண்கைள் மேற்கூடியவாறு பாதிப்புக்களை ஏற்படுத்தியவண்ணமுள்ளன.
அதுபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, இரணைதீவு, கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா போன்ற பகுதி மீனவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இப்பகுதிகளில் உள்ளவர்கள், சிறிய பண்ணை கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு ஒரு சிலருக்கு 2இலட்சம் ரூபா நிதி வழங்கப்படுகிறது. இது உள்ளுர் மீனவர்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கபபதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில், ஒருசில கடலட்டை பண்ணைகள் உள்ளுர் சார்ந்தவர்களின் பெயர்களில் அமைக்கப்பட்டாலும், அவற்றின் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் பிறிபகுதிகளைச் சேர்ந்தவர்களே கையாளுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றது.
இது, வடகடல்வளத்தினை வெளிமாவட்டத்தவர்கள் இலகுவாக உட்புகுந்து ஆட்சி செய்யும் நிலைமையை தோற்றுவித்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இந்த நிலையில், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, வடகடலில் 1972 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த வகையான ஆய்வும் முன்னெடுக்கப்படவில்லை.அவ்வாறிருக்கையில், எந்தவிதமான ஆற்வறிக்கையையும் பின்பற்றாமல் வடகடலில் கடலட்டை பண்ணைகள் தாராளமாக ஸ்தாபிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்ட விரோதமாக கடலில் ஸ்தாபிக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளை அகற்றுவதற்கு கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. அத்திணைக்களம் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
இந்த நிலைமை தொடர்வதால் சில கரையோரப்பகுதிகளில் இருக்கும் சிறுமீன்பிடியாளர்கள் அப்பகுதியை விட்டு இடப்பெயர்வாகும் நிலைமையும் தோன்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றார்
இதற்கு மேலதிகமாக, கூட்டுறவு சங்கம், கிராமிய அமைப்பு மற்றும் அட்டை வளர்ப்பு சங்கம் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
இச்சங்கங்களின் துணையுடன், வட,கடலின் வளம் பறிபோகும் நிலைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடற்தொழிலாளர் சங்கங்களுக்குள்ளும் மோதல் உருவாகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.