நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உடனான கலந்துரையாடல் பேசிய அவர், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
பல்கலைக்கழகக் கட்டமைப்பை பேணுவது மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்கு தேவையான வெற்றிடங்களை அடையாளம் கண்டு அவற்றை நிரப்புவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வருடாந்தம் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள கல்வி வசதிகள் போதுமானதாக இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிதி ஒதுக்கீடு வரம்புகளை முகாமைத்துவம் செய்து பல்கலைக்கழகக் கட்டமைப்பின் வசதிகளை மேம்படுத்துவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், மருத்துவ பீடங்கள், பொறியியல் பீடங்கள் மற்றும் விஞ்ஞான பீடங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை மீள வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பில் தீர்மானம் எடுக்கையிலும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்கையிலும் நவீன உலகிற்கு ஏற்றவாறு முறையான ஆலோசனைகளைப் பெற வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.