டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் இக்கட்டான நிலைக்கு பங்களாதேஷ் தள்ளப்பட்டுள்ளது.
ஆறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட பணத்தை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலுவைத் தொகைகளை செலுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டதால் குறைவான எரிபொருளை அல்லது விநியோகத்தை நிறுத்துவதாக சில நிறுவங்கள் அச்சுறுத்தியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிசக்தி இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் பங்களாதேஷ், அதன் ஏற்றுமதி சார்ந்த ஆடைத் தொழிலை மோசமாகப் பாதித்த எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக மின்வெட்டுகளை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய பணத்தை ரூபாயில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என உள்நாட்டு வங்கிகள் அரசாங்கத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளன.
அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் டொலர்களுக்கான தேவையை மத்திய வங்கி பூர்த்தி செய்யாததால், இறக்குமதிக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியாத நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மோதல் காரணமாக பங்களாதேஷின் அந்நியச் செலாவணி 30.18 பில்லியனாக உள்ளது. இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.