2050க்குள் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பல முன்முயற்சிகளை கையிலெடுத்துள்ளது.காபன் நடுநிலைமையை பேணுவதற்காக 2050ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை பூச்சியமாக்குவதற்கான திட்டங்களையும் இலங்கை முன்னெடுத்துள்ளது.
இதனால், நிலக்கரி மூலமான ஆற்றலை மேலும் அதிகரிக்காதிருப்பதற்கும், படிம எரிபொருள் மானியங்களை படிப்படியாக நீக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான 70சதவீத மின் உற்பத்தியை பெற்றுக்கொள்வதற்கு இலக்கொன்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் பல்வேறு வடிவங்களில் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வளங்கள் பூகோளக் காலநிலை நிலைமைகளினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.இலங்கை இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்டு அயனமண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தீவாக இருக்கின்ற காரணத்தினால் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை மற்றும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை எனும் இரண்டு பருவமழைகளைப் பெறுகின்றது.
மத்திய மலைநாடு, தாழ்நில மலைத் தொடர்கள், சமதரைகள் மற்றும் முகில் உருவாக்கத்தினைப் பாதிக்கின்ற சமவெளிகள் ஆகியவை எமது நாட்டில் காணப்படுகின்றன. நாட்டின் வருடாந்தச் சராசரி மழைவீழ்ச்சி 750 மில்லி மீற்றருக்கும் 6000 மில்லிமீற்றருக்கும் இடையில் அமைந்துள்ளது. இவையே வற்றாத ஆற்று முறைமைக்கான மூலங்களாக அமைந்துள்ளன.
அயனமண்டலத்தின் உயிரியல் காலநிலை நிலைமைகளுடன் சேர்ந்துள்ள உயர் மழைவீழ்ச்சியானது நாட்டில் உயர் தாவர அடர்த்தியினை வழங்கியுள்ளது.எனவே உயிரியப் பொருண்மை அபரிமிதமாகக் கிடைக்கின்றது. இலங்கை பூமத்திய ரேகையின் வலயத்தினுள் அமைந்துள்ள காரணத்தினால் வருடம் முழுவதும் சூரியக் கதிர்வீச்சினைப் பெற்றுக்கொள்கின்றது.
நாட்டின் அயன வெப்பநிலையும் இந்து சமுத்திரத்தில் நாடு அமைந்துள்ள நிலையும் தனித்துவமான காற்றுப் பிரிவுகள் நாட்டிற்குக் கிடைப்பதற்கு வழிகோலியுள்ளன. இவை எமது நாடு தாராளமான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் தளத்தினைக் கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட வளத்தினைச் சக்தி விநியோக மூலமாகப் பயன்படுத்துவதற்கு அச்சக்தி உள்நாட்டிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ கிடைக்கக்கூடியதாக இருத்தல் மாத்திரமே கருத்திற்கொள்ளப்படவேண்டிய காரணியாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.
மிக முக்கியமாக, கிடைக்கக்கூடிய ஏனைய மூலங்களுடன் ஒப்பிடுகையில் பயன்பாடானது சிக்கனமானதாக இருக்கவேண்டும். எனவே, வளத்தினை மிகவும் பயன்மிக்க வடிவமாக மாற்றுவதற்கு இருக்கின்ற தொழில்நுட்பம் சக்தி விநியோகத்திற்கான சக்தி வளத்தினைத் தெரிவுசெய்வதில் முக்கியமானதாகும்.
இதற்கமைவாக, இலங்கை தனது மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கு அயல்நாடான இந்தியாவை சிறந்த முன்னுதாரணமாக கொள்ள முடியும்.இந்தியாவைப் பொறுத்தவரையில், அது உலகின் 3ஆவது மின்சார நுகர்வோர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியைக் கொண்டுள்ளது.
இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டில் 40சதவீதமான ஆற்றல் திறன் மேம்படுத்தப்பட்டதோடு புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து சக்தியைப் பெறும் செயற்பாட்டையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.2021 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறியீட்டின் படி, அமெரிக்கா மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்தியா 3ஆவது இடத்தைப் பிடித்தது. காற்று, சூரிய ஒளி மற்றும் கலப்பின திட்டங்களுக்கு 50 ஜிகாவோல்ட் கேள்விப்பரத்திரங்களை வெளிட்டுள்ளது.
அத்துடன், 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவோல்ட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.2016ஆம் ஆண்டில், பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கத்தின் அடிப்படையில் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் இலக்குகளின் பிரகாரம் இந்தியா தனது மொத்த மின்சாரத்தில் 50சதவீதத்தை 2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யவதை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
செப்டம்பர் 2020 நிலவரப்படி, 89.22 ஜிகாவோல்ட் சூரிய ஆற்றல் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ளதோடு 48.21 ஜிகாவோல்ட் திட்டங்கள் செயலாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.25.64 ஜிகாவோல்ட் திறன் கொண்ட திட்டங்கள் ஏலத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.2020 ஆம் ஆண்டில், உலகின் முதல்நிலை வகிக்கவல்ல 5 பெரிய சோலர் வயல்கள், ராஜஸ்தானில் உள்ள மிகப்பெரிய 2255 மெகாவோல்ட் பட்லா சோலார் வயல் மற்றும் கர்நாடகாவில் தும்கூர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 1000 மெகாவாட் கர்னூல் உள்ளிட்டவை பிரதானமானவையாகும்.
இந்தியாவில் காற்றாலை மின்சாரம் ஒரு வலுவான உற்பத்தித் தளத்தைக் கொண்டுள்ளதோடு 20 உற்பத்தியாளர்கள் 53 வௌ;வேறு காற்று விசையாழி மாதிரிகள் சர்வதேச தரத்தில் 3 மெகாவோல்ட் அளவு வரை உருவாக்கியுள்ளமையும் விசேடமானதாகும்.இந்நிலையில் தான் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் இந்தியா இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முன்னகர்த்தப்படுகின்றபோது, இந்தியாவும், இலங்கையும் கூட்டாக தனது இலக்குகளை 2030மற்றும் 2050ஆம் ஆண்டுகளில் அடைய முடியும் என்பது எதிர்பார்ப்பாகும்.