வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு எதிராக தொலைக்காட்சி செய்தி அறிக்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.
தூதரக விவகாரப் பிரிவின் தற்போதைய நியமன முறையை மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தி ஆவணங்களை அங்கீகரிக்கும் நடவடிக்கையில் தாம் ஈடுபடவில்லை என்றும் அறிவித்துள்ளது.
பொது மக்களுக்கு பயனுள்ள மற்றும் திறமையான சேவையை உறுதி செய்வதற்காக இந்த நியமன முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆகவே இந்த மூன்றாம் தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறும் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தூதரக விவகாரப் பிரிவின் கவுண்டரில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 25 நிமிடங்களில் ஒரு ஆவணம் அங்கீகரிக்கப்பட்டு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சேவை வழங்கப்படுகிறது என்றும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத செயல்கள் குறித்தும், அவர்களின் தந்திரோபாயங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.