பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் காவலில் இருந்தபோது குறித்த பெண் தாக்கப்பட்டதாகக் கூறி, அவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
பின்னர் வெலிக்கடை பொலிஸில் கடமையாற்றிய ஏழு பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒரு கான்ஸ்டபிள் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸார் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.