தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நாட்டில் ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்கஆணைக்குழு தொடர்பான ஆரம்பக் கற்கைகளை மேற்கொள்ள நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் சர்வதேச தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் பிரதானிகளுடன் விசேட கலந்துரையாடல்களிலும் இவர்கள் ஈடுபட்டனர்.
அதற்கமைய, நாட்டிலும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபிக்க நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.