யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க நாளை புதன்கிழமை முதல் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக்க இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் இந்த மாதம் 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் வீதி விபத்துகளில் 10ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதனால் வீதி விபத்துக்ளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் காங்கேசன்துறை வீதி, வைத்தியசாலை வீதி, ஸ்ரான்லி வீதி ஆகிய வீதிகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துதல் அதிகரித்துள்ளன.
அதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
எனவே நாளை புதன் கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் எடுக்கவுள்ளனர்.
எனவே பொது மக்கள், சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து வீதி விபத்துக்களில் இருந்து தங்களையும் வீதியில் செல்வோர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.