நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டெங்கு நோயின் தாக்கமானது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் குறைந்தளவில் உள்ளது என்றும் அதேபோல டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமானது மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.