ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் எடுக்கவுள்ள சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசாங்கம் தற்போது ஒலிபரப்புத் தொடர்பான சட்டமூலம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது.
குறித்த அரசாங்கத்தின் முயற்சியில் குறித்த ஆணைக்குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்த வேளையும் ஒரு ஊடக நிறுவனத்திற்குள் சென்று விசாரணைகளை நடத்தலாம்.
இந்த விடயம் ஊடக சுதந்திரத்தினை வெகுவாகப் பாதிக்கும் என்பதே எமது குற்றச்சாட்டு.
அரசாங்கம் ஏன் தற்போது அவசர அவசரமாக இந்த ஒலிபரப்புத் தொடர்பான சட்டமூலத்தினைக் கொண்டு வருகின்றது என்ற கேள்வி எம் மத்தியில் எழுகின்றது.
அரசாங்கம் முன்னர் கொண்டு வருவதற்;கு எத்தனித்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றினை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை அரசாங்கம் சந்தித்துள்ளது.
இதற்கு ஊடகங்களும் ஒரு காரணமாக இருந்துள்ளன. எனவே முதலில் ஊடகங்களை அடக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் தற்போது இந்த சட்டமூலத்தினைக் கொண்டு வருவதற்கு எத்தனிக்கின்றது.
இது தவறான விடயமாகும். இதற்கு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் நாம் எமது எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.
எனவே தற்போது ஊடகங்களை முதலில் அ;டக்கிவிட்டு பின்னர் தமக்கு ஏற்ற விதத்தில் சட்டமூலங்களைக் கொண்டு வரலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அவ்வாறு செய்யக்கூடாது. இது தவறான விடயமாகும்.
முதலில் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள் என்றே நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
எனவே புதிய சட்டமூலங்களைக் கொண்டு வருவது போன்ற செயற்பாடுகளை மக்களாணை பெற்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னெடுக்கலாம் என அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
அதற்கு நிச்சயமாக நாம் ஆதரவு வழங்குவோம்” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.