அமைச்சரவை அமைச்சர்கள் தமக்குக் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களைச் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இராஜாங்க அமைச்சர்கள் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அந்த அமைச்சுக்களின் பொறுப்புக்களைப் பகிர்ந்தளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனக்கு மட்டுமல்ல, அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்களுக்கும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி கலந்துரையாடலில் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.