மாட்டு இறைச்சியினை உண்பது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் மற்றும் இறைச்சிப் பாவனை தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாடுகள் அறுக்கின்ற போது பிரதேசசபை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் அக்கறையுடன் செயற்படுவதனால் மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்த பீதியும் அடையத் தேவையில்லை.
இதேவேளை உத்தியோகபூர்வமற்ற ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் அவைகள் ஏனைய நாடுகளில் பிரதேசங்களில் நடந்தவற்றை திரிவு படுத்தி வருகின்றன.
ஆனால் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுக்கப்படுகின்ற மாட்டு இறைச்சியை நுகர்வதனால் எவ்வித நோய்களும் ஏற்பட போவதில்லை.
அது மாத்திரமன்றி நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள சகல இறைச்சி கடைகளுக்கும் நாமும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் கள விஜயம் செய்து ஆராய்கின்றோம்.
இந்த ஆராய்வின் போது எமது முத்திரை பொறிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகின்ற இறைச்சிகளை மனித நுகர்விற்கு பொருத்தமற்றது என கூறி அந்த இடத்தில் அழிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.
இச்செயற்பாடு நாளாந்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இறைச்சியில் எமது முத்திரை பொறிக்கப்பட்டிருக்காது. அவ்வாறான இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறான இறைச்சிகளை விற்பதற்கு அனுமதி நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.