குழந்தைகளின் உழைப்பை சுரண்டுவதற்கு எதிரான தினம் இன்றாகும். நாட்டின் எதிர்கால தூண்களான குழந்தைகளை இளம் வயதில் வேலைக்கு அனுப்புவதை தடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜீன் 12 ஆம் திகதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் யாவருக்கும் சமூக நீதி என்பதாகும். வறுமையனாலும் பெற்றோரை இழந்தமையினாலும் போதைக்கு அடிமையான குடும்பங்களில் இருந்து அவர்களுடைய பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஆயுதமாக குழந்தைகள் மாற்றப்படுகின்றனர்.
பாதுகாப்பற்று அநாதராவாக விடப்படும் குழந்தைகளே இவ்வாறு இலகுவாக சமூக விரோதிகளினால் குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர். சமூக சீர்கேடும் குழந்தை தொழிலாளர்களின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாகும் . அத்துடன் பொருளாதார நெருக்கடிக் காரணமாக குழந்தைகளின் மனதை மாற்றி வேலைக்கு அனுப்புவது சமூகமா அல்லது பெற்றோரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குழந்தை தொழிலாளர்களின் வயது வித்தியாசம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகின்றது. ஐக்கிய நாடுகளின் குழந்தை தொழிலாளர் சட்டப்படி 16 வயது நிறைவடைவதற்கு முன்பாக குழந்தைகளை பணிக்கு அமர்த்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளில் சோமாலியா மற்றும் ஐக்கிய நாடுகளை தவிர உவகிலுள்ள பிற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு குழந்தை தொழில் முறைக்கு எதிரான ஒரு இயக்கம் உருவெடுத்ததது. ஆயிரங்கனக்கான மக்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
சோமாலியாவை வழிநடத்துவதற்கு முறையான அரசாங்கம் இன்மையினால் தாமதாக 2002 ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. குழந்தை தொழிலாளர் வரலாற்றில் இன்று 169 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஒப்புக் கொள்ளப்பட்டதிற்கு உலகளவில் நடந்த விழிப்புணர்வே மிகப் பெரிய காரணமாகும்.
இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உலகளாவிய நிலைத்தன்மையை இலக்காக கொண்டு 2025 ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது உலகமெங்கிலுள்ள 10 குழந்தைகளில் ஒரு குழந்தை தொழிலாளியாக வஞ்சிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
உலகலாவிய ரீதியில் நோக்கும் போது ஆசியாவில் 62 சதவீதமானோரும் ஆபிரிக்காவில் 32 சதவீதமானோரும் அமெரிக்காவில் 1 சதவீதமான குழந்தை தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் விபரிக்கின்றன. வறுமை மிகுந்த நாடுகளான் எத்தியோப்பியா, சோமாலியா, கொங்கோ மியன்மார் சூடான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் சிம்பாபே போன்ற நாடுகளிலேயே அதிகமான குழந்தை தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
யுனிசெப் மதிப்பின் படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசித்து வருவதாகவும் ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்று சுகாதாரமற்ற நிலைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சுமார் 10 கோடி சிறுவர்கள் ஆரம்பக் கல்வியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலும் 15 கோடி சிறுவர்களய் ஊட்டச்சத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவை தவிர இலங்கையில் 10 முதல் 14 வயதெல்லை வரையுள்ள ஏறத்தாழ 35 ஆயிரம் சிறுவர்கள் கடைகள் பண்ணைகள் மீன்பிடி மற்றும் கைத்தொழில் நிலையங்களில் வேலை செய்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கiயில் குழந்தை தொழிலாளர்கள் உருவாக்கப்படுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தினால் 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.
அத்துடன் மகளிர் சிறுவர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு சிறுவர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, இவ்வாறு சிறுவர்கள் வேலைக்க அமர்த்தப்படும் நேரத்தில் 1929 எனும் அவரச இலக்கத்திற்கு அறிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
SAVE THE CHILDREN அமைப்பின் கணிப்பு படி குழந்தை தொழிலாளராக உரிமை மறுக்கப்படும் குழந்தைகளில் சுமார் பத்தாயிரம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக 14 மற்றும் 15 வயதிற்கிடைப்பட்ட குழந்தைகளில் சுமார் 82 சதவீதமானோர் அறியாமை காரணமாவும் தாமாக விரும்பியும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்களின் அவல நிலைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதற்கு எதிராக குரல் எழுப்பு வேண்டும் ஆபத்தாக சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டு குழந்தை தொழிலாளர்களுக்கான எதிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
குழந்தை தொழிலாளர் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் ஆதவன் செய்தி பிரிவு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜிடம் மேற்கொண்ட விசேட நேர்காணல்
01. இலங்கையில் குழந்தை தொழிலாளர்கள் உருவாக்கப்படுவதை தடுக்கும் வகையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்ற ரீதியில் நீங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மூன்று வகையான வகையான விடயங்ககை வலியுறுத்தியுள்ளது. சிறுவர்கள் துஸ்பிரயோகங்களிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கும் பொருட்டு முற்பாதுகாப்பு வேலைத்திட்டங்களை கிராமமங்கள், பாடசாலைகள், பிரதேச செயலக மட்டங்கள் மற்றும் தேசிய மட்ட ரீதியாக விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப பொருத்தமான சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய தேசிய கொள்கைகளை உருவாக்குதல்.
அத்துடன் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதனை தடுப்பதற்காக விழிப்பூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் பாடசாலை இடைவிலகலுடைய மாணவர்களே சிறுவர் தொழிலாளர்களாக உருவாகின்றனர்.
எனவே பாடசாலை மட்டத்தில் சிறுவர்களை கண்காணிக்கவும் இடர்நிலையிலுள்ள சிறுவர்களை இனங்கண்டு அவர்களிற்கான உள சமூக பொருளாதார ஆதரவுத் திட்டங்களை முன்னெடுக்கவும் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் ஒவ்வொரு பாடசாலைகளிலும் நியமிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பாடசாலை இடைவிலகளை இனங்கண்டு அவர்களை மீள பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு அவர்களிற்கான கற்றல் உபகரண உதவிகளும் வழங்கி அவர்கள் இடரின்றி கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் உடனுக்குடன் தொழில் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கைகளிற்கு உளளாக்கப்படுகின்றன. 2019 ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
02. சிறுவர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கையாள வேண்டும்?
தற்போதைய காலத்தில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் குறிப்பிட்டுக்கூறக்கூடிய வகையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பதிவுசெய்யப்படாத நிலையில் பல துஸ்பிரயோகங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலான துஸ்பிரயோகங்கள் சிறுவர்களிற்கு நன்கு தெரிந்த நபர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பதனை அவதானிக்க முடிகின்றது. எனவே சிறுவர்களின் சமூக பாதுகாப்பு என்பது இன்று உறுதி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.
சிறுவர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்ய சட்டங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உறுதி செய்ய முடியாது. குறிப்பாக சிறுவர்கள் என்போர் எல்லோராலும் எமது சிறுவர்கள் எனும் நோக்கில் உணரும் நிலை உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்கள் அனைத்து தரப்பினராலும் துஸ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாமரர் முதல் படித்தவர் வரை சிறுவர்களை துஸ்பிரயோகங்களிற்கு உள்ளாக்குகின்றனர்.
எனவே சமூகமட்டத்தில் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். சிறுவர்கள் பாதிப்பின் பின்னர் பரிகாரங்களை தேடுவதை விட பாதிக்கப்படாது இருப்பதற்கான முற்பாதுகாப்பினை உறுதியாக பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக வன்முறைக்கும் துஸ்பிரயோகங்களிற்கும் ஆளாகும் சிறுவர்கள் எதிர்காலத்தில் வன்முறையாளர்களாகவும் உள ரீதியான பாதிப்புகளை கொண்டவர்களாகவும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனும் கோட்பாடு சார் விளக்கங்களையும் பிள்ளை நேய அணுகுமுறைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.
எனவே சிறுவர்களின் சமூக பாதுகாப்பினை உறுதிசெய்ய விழிப்புணர்வுள்ள சமூக கட்டமைப்பு உருவாக்கபட வேண்டும் என்பதோடு குடும்பம், சமூகம் ஆகியவை சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் சிறுவர்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தமது பொறுப்புகளை காலத்தின் தேவை கருதி நவீன அறிவு மற்றும் தொழில்நுட்பத்தினை உள்வாங்கி செயற்பட வேண்டியதும் அவசியம் ஆகும்.
03 .இவ்வாறு வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பில் சட்ட ரீதியில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பாக சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க சட்டத்தின் படி பெண்கள், இளைஞர் மற்றும் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க சட்டத்தின் படி தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின் படி கடை மற்றும் அலுவலக ஊழியர் (தொழில், ஊதியம் ஒழுங்குபடுத்தல்) ஆகியவை சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் இணைப்பு செய்யப்படும். தொழில் திணைக்களமானது முறைப்பாடுகளை பெற்று முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பர். அதனை தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் பிரகாரம் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தியவர்களிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்படும்.
14 வயதுக்கு குறைந்த சிறுவரை வேலையில் ஈடுபடுத்துதல் மற்றும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தால் காவல்துறை அலுவலர் குற்றவியல் வழக்கு முறை அல்லது தண்டனைச்சட்டககோவையின் படி செயற்பட்டு வழக்கு தொடருவதோடு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சிறுவரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பொறுப்பு தொடர்பாகவும் சட்ட ஏற்பாடுகளை முன்னெடுப்பார். அவற்றின் அடிப்படையில் நிருபிக்கப்பட்ட குற்றங்களிற்காக குற்றவாளிக்கு தண்டனையும் வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்ட சிறுவரிற்கு பாதிப்பின் அடிப்படையை கருத்திற் கொண்டு நட்ட ஈட்டினையும் குற்றவாளி வழங்க வேண்டும்.
04. கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னர் சிறுவர்களின் பாதுகாப்பு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது?
கொரோனா மற்றும் கொரோனாவை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை ஆகியன சிறுவர்களையே அதிகமாக பாதித்துள்ளது. குறிப்பாக கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் நீண்ட விடுமுறைகளை வீட்டிலேயே கழிக்கும் நிலைக்க தள்ளப்பட்டனர்.
எனவே சிறுவர்கள் தமது திணிக்கப்பட்ட இவ் நீண்ட விடுமுறையினை ஒவ்வொரு நாளும் எவ்வாறு ஆரோக்கியமாக கழிப்பது என்பதில் முழுமையான தகவலமைப்பை பெற்றிருக்கவில்லை. மேலும் அவர்களை முகாமை செய்வதற்கான திறன்களிலும் பெற்றோரும் பாதுகாவலர்களும் தோற்றுப்போயிருந்தனர்.
குறிப்பாக பெற்றோர்களும் கூட இக்காலத்தில் மன உளைச்சல்களிற்கு ஆளாகி இருந்ததனால் சிறுவர்களின் பராமரிப்பு மீது குறைபாடுகளும் இனங்காணப்பட்டுள்ளன. மேலும் வறுமைப்பட்ட குடும்பங்களிலிருந்து சிறு சிறு வேலைக்கு செல்லும் மற்றும் சிறு வியாபாரங்களிலும் ஈடுபடும் சிறுவர்களையும் காண முடிந்தது.
இந்த நிலைமையானது சிறுவர்களை பணப்புழக்கத்தில் உள்ளாக்கியதுடன் மேலும் இக்காலத்தில் சிறுவர்களின் நடத்தையில் பிறழ்வுகளும் குடும்ப வன்முறைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட தன்மைகளும் அவதானிக்கப்பட்டன. மேலும் சிறுவர் தொழிலாளர்களை உருவாக்கும் காரணியாகவும் கொரோனா காலம் அவதானிக்கப்ட்டது.
இதே போன்றே பொருளாதார நெருக்கடி காரணமாகவும் கிராமமட்டங்களில் சிறுவர்கள் பெற்றோருடன் இணைந்து சிறு சிறு வேலைகளிற்கு உள்வாங்கப்பட்டனர். அது காலப்போக்கில் சிறுவர் தொழிலாளிகளை உருவாக்கியுள்ளது. மேலும் போசாக்கு குறைபாடுகள், உள ஒழுங்கீனங்கள் தொடர்பான சவால்களை சிறுவர்கள எதிர்கொண்டுள்ளதோடு சிறுவர்கள் மத்தியில் கைதொலைபேசி பாவனையின் அதிகரிப்பு சமூக ஊடகங்கள் ஊடான துஸ்பிரயோகங்களை சிறுவர்கள் எதிர்கொள்ளவும் காரணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
05. குழந்தை தொழிலாளர்கள் உருவாவதற்கு காரணம் அவர்களின் சூழ்நிலையா? அல்லது பெற்றோரா?
குழந்தை தொழிலாளர்கள் உருவாகுவதில் பெரும் பின்னணி வகிப்பது சூழ்நிலை என்றே கூறலாம் . நாம் ஒட்டுமொத்தமாக பெற்றோரின் மீது குற்றச்சாட்டினை முன்வைக்க முடியாது. பெரும்பாலான சிறுவர் தொழிலாளர்கள் வறுமையின் நிமித்தம் தொழிலுக்கு சென்றவர்களாக காணப்படுகின்றனர். எனினும் வறுமை அவர்களை நேரடியாக தொழிலுக்கு அழைத்து செல்வதில்லை. வறுமை காரணமாக சிறுவர்கள் போதுமான உணவு, கல்வி ஆகியவற்றை பெறுவதில் சிரமாப்படுகின்றனர். அதன் விளைவாக பாடசாலை ஒழுங்கீனம் மற்றும் இடைவிலகல் என்பன ஏற்படுகின்றது. இடைவிலகிய சிறுவர் தொடர்ந்து தனது தேவைகளை நிறைவேற்ற சிறு சிறு வேலைகளிற்கு செல்கிறார். இதன் போது பெற்றோர் அவரினை மீண்டும் பாடசாலைக்கு இணைப்பதில் அக்கறையற்றவர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் சிறு சிறு வேலைகளிற்கு சென்று வருமானமீட்டிய சிறுவர் பின்னர் தொடர்ச்சியாக முழுநேர தொழிலாளி ஆகின்றார். இதன் பொது குடும்பம் வருமானத்தை பெறுவதனை உணர்ந்து பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதனை ஊக்குவிக்க முயல்கின்றனர். மேலும் குடும்ப கட்டமைப்பு குழப்பமடைந்த குடும்பங்களிலுள்ள சிறுவர்கள், ஒற்றைப்பெற்றோரை கொண்ட குடும்பங்கள், பெற்றோரின் பிரிவு அல்லது இறப்பால் முதிய பாதுகாவலரை கொண்ட சிறுவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களே பெரும்பாலும் சிறுவர் தொழிலாளிகளாக உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே இத்தகைய சிறுவர்களை இனங்கண்டு அவர்களிற்கான உள சமூக பொருளாதார ஆதரவுகளை வழங்கி அவர்களை கற்றல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதன் மூலம் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதனை குறைக்க முடியும்.
தற்போது பல்வேறு தொழிநுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும் குழந்தை தொழிலாளர் புரட்சி இன்றும் ஓயவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. ஓவ்வொரு நாட்டிலும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அவர்களின் உரிமைகள் நிறைவேற்றப்பட்ட வேண்டும். அப்போது நாட்டின் தான் வளமான எதிர்காலம் உருவாகும் . ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் ரேநத்திலும் நம் நாட்டின் எதிர்காலம் இருளுகின்றது என்பதை யாவரும் நினைவில் வைத்து செயற்படுவோம்.