இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் வலுவடையுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கணிப்புகளை முன்வைத்த போதிலும், அத்தகைய கணிப்புகளுக்கு அப்பால் நாட்டின் பொருளாதாரத்தை கடந்த வருடமும் நிர்வகிக்க முடிந்தது.
உலக வங்கியின் கணிப்பீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறை 4.2 வீதமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறை 3.0 ஆக இருக்குமென சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
எவ்வாறாயினும், மத்திய வங்கியின் கணிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறை 2 – 3 இற்கும் இடையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரிக்க அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், வருடத்தின் இறுதிக் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சாதகமானதாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.