தற்போது பல வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள ஸ்கானர் இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
5 மாதங்களாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் செயலிழந்துள்ளதால் நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அரச வைத்தியசாலைகளில் தற்போது 13 எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளன. அதில் பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் உள்ள இயந்திரம் ஒன்று 2 வருடங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக தற்போது 11 எம்.ஆர்.ஐ. ஸ்கான் இயந்திரங்களே இயங்கி வருவதாக அரசாங்க கதிரியக்க நிபுணர்கள் தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
அத்தோடு பல வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள ஸ்கானர் இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.