அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2026 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதா, இல்லையா? என்பது குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தெரிவித்துள்ளது.
திங்களன்று (26) லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை சந்தித்த பின்னர் PCB தலைவர் மொஹ்சின் நக்வி இந்த விடயத்தைக் கூறினார்.
பிரதமருடனான சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதை நக்வி சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார்.

பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கும் போட்டிகளில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட பங்களாதேஷுக்கு பாகிஸ்தான் அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க வேண்டும் என்று பிரதமர் இதன்போது ஷெரீப் நக்வியிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தனது அணியை உலகக் கிண்ணத்துக்கு அனுப்பாமல் இருப்பது, அல்லது போட்டியில் பங்கேற்காமல் இருப்பது, பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான உயர்மட்டப் போட்டியைப் புறக்கணிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் விளக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பங்களாதேஷ் போட்டியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கும் என்று PCB முன்பு கூறியிருந்தது.
20 அணிகள் கொண்ட இந்த நிகழ்வில் பங்களாதேஷ், இந்தியாவில் பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, அதன் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியிருந்தது.
ஆனால் ஐசிசி அந்த திட்டத்தை நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.












