பாணின் விற்பனையை ஒழுங்குபடுத்தும் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவசரச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக, வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ சமர்ப்பித்த பிரேரணைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாண் விற்பனையை ஒழுங்குபடுத்தல் மற்றும் விற்பனை செய்யப்படும் பாண்களுக்கு பழுதடைந்த மாவை கலக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளைச் சட்டத்தின் சில விதிகள் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் விதிமுறைகளுடன் ஒத்துப்போகாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
இதனால், பாண் தொடர்பான கட்டளைச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என அவதானிக்கப்பட்டது.
ஆகவே பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.