சீன அரசாங்கத்தினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் விநியோகத்தில் விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் கேட்டுக்கொண்டார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “சீன அரசாங்கத்தினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் தற்போது வட மாகாண ரீதியாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைவாக மன்னார், முசலி, நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஆனால் மீனவ சங்கங்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கான மண்ணெண்ணை விநியோகம் படகு ஒன்றுக்கு 75 லீற்றர் வழங்கப்பட்டு வந்தாலும் மொத்தமாக 150 லீற்றர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் மிகுதி 75 லீற்றர் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் இது வரை இல்லை.
தற்போது வழங்கப்பட்டமை முதல் கட்டம் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும் வழங்கப்படுகின்ற எரிபொருள் உரிய மீனவர்களுக்கு, மீனவர் படகுகளுக்கு வழங்கப்படுவதாக இல்லை.
பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு கூட சில காரணங்களை வைத்து எரிபொருள் வழங்கப்படவில்லை.உரிய அதிகாரிகள் பதிவுகளை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட சிறு தவறுகள் காரணமாக குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கு அப்பால் உப்புக்குளம் உள்ளடங்களாக நிறைய மீனவ சங்கங்கள் எரிபொருள் விநியோக பதிவுகளில் உள் வாங்கப்படாது முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட சங்கங்களின் படகுகளுக்கும் விடுபட்ட மீனவர்களின் படகுகளுக்கும் தொடர்ந்து எரிபொருளை பெற்றுக்கொடுக்க கடற்றொழில் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கண்துடைப்புக்காக செய்கிறோம் என கூறாது, விடுபட்டவர்களுக்கும், பதிவு செய்யப்படாத ஏனை மீனவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.