மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலை உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஊடக அடக்குமுறையின் கீழ் 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு இந்த நாட்டுக்கு மட்டுமே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளிவராமல் தடுப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவருகின்றது என்றும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்க முடியாது என்பதை நினைவில்கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டு 69இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ, அதே மக்களினால் இருப்பதற்கு இடமில்லாமல் துரத்தியடிக்கப்பட்டார் என்றும் அந்த நிலைமை இன்னுமொருவருக்கு வராது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை என்றும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.