யாருக்கும் கைகட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள ஈ.பி.ஆப்.எல்.எப் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற 33 ஆவது தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும்-யாருக்கும் கை கட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எமது மக்களின் உரிமைகள் வெற்றி பெற வேண்டும். இந்த மண்ணில் யாரும் கேள்வி கேட்க முடியாத நிலையில், நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.
ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய 5 கட்சிகளும் ஒன்று கூடி நாங்கள் அனைவரும் திடமான ஒரு பாதையில் செல்வதற்கு ஒரு யாப்பை தயார் செய்து அனைவரும் அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
முன்னர் தமிழரசு கட்சி இருந்த போது நாங்கள் ஒரு யாப்பை தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள். இன்று குறித்த 5 கட்சிகளுக்கும் ஒரு நிர்வாகத்தையும் தெரிவு செய்துள்ளோம்.
கட்சிக்கான செயலாளர், பேச்சாளர், குறித்த கட்சிக்கான தேசிய அமைப்பாளரை நியமித்துள்ளோம். இவ்வாறு பல்வேறு தெரிவுகளை மேற்கொண்டு ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளோம்.
எமது முக்கிய நோக்கம் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும்.
எங்களுக்காக இருக்கக்கூடியது அரசியல் சாசனத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஆகும். 13 ஆவது திருத்தச் சட்டம் என்றால் என்ன? மாகாணங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முழுமையாக இல்லை. ஆனால் இருக்கக்கூடிய அதிகாரங்களை எங்களுக்கு தாருங்கள். எங்களுக்கு அதிகாரம் வழங்கினால் எங்களுக்கான ஒரு பொலிசை உருவாக்குவோம். மாகாணத்தை கேட்காது காணிகளை யாருக்கும் வழங்க முடியாது என்ற நிலை உள்ளது.
அத்துடன் சுமார் 15 இலட்சம் புலம்பெயர் உறவுகள் எமக்கு ஆதரவாக உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.