‘சப்தமிட்டு நடக்காதீர்கள், இங்கு தான் என் அருமைத் தாயார் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்”. புகழ் பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்த கவிதை.
மேற்குல மக்கள் இறந்தவர்களின் கல்லறைகளை எவ்வளவு அழகாவும் அமைதியாக வைத்திருக்கிறார்கள் என்பதை யாழ்.மாவட்டத்தில் உள்ள மயானங்களை தாண்டிச் செல்லும் போது எண்ணத்தில் நினைவில் வரும்.
சிறப்பு பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் தன் கல்லறையில் எழுதப்பட்ட வேண்டிய வரிகளை தன் நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார்.
“என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள் நானும் உங்களைப் போல் உயிரோடு தான் இருக்கின்றேன் . உங்கள் அருகிலேயே நிற்கின்றேன். கண்களை மூடி , சுற்றிலும் பாருங்கள் நான் உங்கள் முன் நிற்பதைக் காண்பீர்கள்”
இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் அல்லது; புதைக்கும் இடத்தை சுத்தமாகவும் அழகாகவும் அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும் .
‘மரணம் வாழ்வில் நிதர்சனமானது
எவரும் தவிக்க முடியாதது
எல்லோரும் எதிர்கொள்ள வேண்டியது’
மரணத்தின் பின் இறுதி சடங்குகள் உரிய முறையில் நடக்க வேண்டும் என்பதனையே ஒவ்வொரு மனித உயிரும் விரும்பும்.
இறுதியுத்தத்தில் முள்ளிவாய்கால் மண்ணில் இராணுவத்தால் கொல்லப்பட்ட உறவுகளின் உடல்களை இறுதி சடங்குகளை உரிய முறையில் செய்து எரியூட்டவோ புதைக்கவோ முடியவில்லை என்ற மன உளைச்சலில் பலர் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கொவிட்19 பெரும் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கம் முடிவு எடுத்தபோது இஸ்லாமிய மக்கள் தமது மார்க்கத்தை அவமதிப்பதாக கொதித்தெழுந்தார்கள்.
இறந்த தம் உறவுகளை புதைப்பதற்கு அனுமதிகோரி நீதிமன்றங்ககளை அணுகி மனுத்தாக்கல் செய்தனர். அத்தோடு நின்றுவிடாமல் அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இறந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும் என்பதனையே எல்லா மதங்களும் இனங்களும் விரும்புவார்கள்.
யாழ்ப்பாணம் சங்கானை கரைச்சி பொது மயானத்தை தாண்டிச் செல்லும் போது துர்நாற்றம் வீசுகின்றது. பிரதேச மக்கள் அன்றாட தமது கழிவுகளை கொட்டும் ஓர் இடமாக மாறிவிட்டது. பிளாஸ்ரிக் போத்தல்கள் பொலித்தீன்கள் உடைந்த கண்ணாடி போத்தல்கள் வெட்டப்பட்ட மரக்கிளைகள் என அத்தனையும் அதனை அண்டிய பகுதிகளில் காணக்கூடியதாக உள்ளது.
இறந்த வீட்டுப்பிராணிகளான நாய் பூனை போன்றவற்றையும் மயானத்திற்கு அருகில் வீசிவீட்டு செல்கின்றனர். மாடு கன்று ஈன்ற பின் போடும் நஞ்சுக்கொடியையும் மயானத்திற்கு அருகில் உள்ள மரங்களில் கட்டி விடுகின்றனர்.மாடுகள் இறந்தாலும் மயானத்திலேயே புதைக்கின்றனர்.
கரைச்சி பொது மயானமானது சுடுகாடும் இடுகாடும் இணைந்த ஓர் இடமாகும். மத நல்லிணக்கம் கொண்ட இடமாக உள்ளது . கவியரசுகண்ணதாசனின் கவிவரிகளில் “சமரசம் உலாவும்” இடமே இதுதான்.
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே……
சங்கானை கிராம சேவகர் பிரிவுகளில் ஜே-78,ஜே-79 ஜே-80 கிராம சேவர் பிரிவுகளும் ஜே- 81 இல் குறிப்பிட்ட சில மக்களும் வட்டு-கிழக்கை சேர்ந்த குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கும் உரிய மயானமாக கரைச்சி பொது மயானம் விளங்குகின்றது.
கரைச்சி பொது மயானத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் காரைநகரில் இருந்து இடம்பெயர்து அப்பகுதியில் முகாமில் இருந்த மக்கள் தற்போது காணிகளை விலை கொடுத்து வாங்கி வாழ்ந்து வருகின்றனர்.இக் காணிகள் தாழ்வான நிலப் பகுதிகளாக உள்ளன.
மயானத்திற்கு முன் பகுதி வயல் வெளியாகஉள்ளது. மழை காலத்தில் அப்பகுதி மக்களால் கொட்டப்படும் கழிவுகள் மழைநீரோடு வயல்களை சென்றடைகின்றன. அவை அங்குள்ள கிணற்றுகளையும் அத்தோடு வயல்காணியையும் மாசடையச் செய்கின்றன. இதனால் பயிர்களும் பாதிப்படைகின்றன.
கரைச்சி மயானம் ஒரு ஒதுக்கு புறமாக உள்ளதால் பல சமூக சீர்கேடுகளும் இடம்பெறுகின்றன. வீடுகளில் உள்ள கழிவுகளை உரப்பைகளில் இட்டு வீட்டுக்கு வெளியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வைக்கும் படி பிரதேச சபை அறிவித்து கழிவு முகாமைத்துவத்தை பேணுகின்றது. ஆனால் கரைச்சி பகுதி மக்கள் பலர் மயானத்திற்கு அருகிலேயே கழிவுகளை கொட்டுகின்றனர்.
மயானத்திற்கு காவலாளி இல்லாதது ஒரு பெரும் சீரழிவுகளுக்கு வழிவகுக்கின்றது . மாலை இரவு வேளைகளில் மூடநம்பிக்கையான பில்லி,சூனியம் , செய்வினை போன்ற துர் சடங்குகள் நடக்கின்றன. பூசாரி ஒருவர் தனது உதவியாளராக ஓர் இளைஞனை அழைத்து வந்து ‘குட்டிச்சாந்தன்’ கலைப்பதாக பெண்களை அழைத்து சடங்குகளை செய்கின்றார்.
அதேசமயம் மயான வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ளமையால் போதை பொருள் பாவனையாளர்களால் போதை பொருட்களை பாவிக்கும் ஒர் இடமாக உள்ளது.இது மட்டுமல்ல போதை பொருள் வியாரிகள் போதை பொருட்களை பரிமாற்றும் இடமாகவும் உள்ளதாக அங்கு வயலில் வேலை செய்பவர்கள் தாம் அவதானித்தாக கூறுகின்றார்கள்.
மயானத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் மினி முகாம் ஒன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மயானத்திற்கு அருகில் உள்ளவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிபுணர்வு அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு அவர்களின் எண்ணங்களில் வெளிப்படவில்லை. மயானத்தில் உள்ள கிணறு புனரமைப்பு செய்ய வேண்டியதாக உள்ளதுடன் சுடலை வயிரவரின் சிறிய கோயிலும் சீர்செய்யப்படவேண்டியதாக உள்ளது.
சூழல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதன் நீண்டகாலமாக நலத்துடன் வாழ முடியும் என்ற யதார்தம் புரியாதவர்களாக அப் பிரதேச மக்கள் உள்ளமை கவலையளிக்கிறது.
துவாரகா கலைக்கண்ணன்