யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன.
நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது.
ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள் கூட்டத்துக்குள் பல்வேறு தரப்பினரும் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு உடையவர்களும் இருப்பார்கள்,அரசியல் விழிப்பு இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் அதிகம் போவான்? இறுதிக்கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தது 3 லட்சத்துக்கும் குறையாத ஒரு சனத் தொகை. மொத்த ஈழத் தமிழ் ஜனத் தொகையில் அது ஒரு சிறிய விகிதம்.ஆனாலும் முழு இனத்துக்குமான போராட்டத்தின் சிலுவையை ஒப்பிட்டுளவில் அதிகமாக சுமந்தது அந்த சிறிய சனத் தொகைதான்.அதேசமயம் ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த தமிழர்கள் அந்த காலகட்டங்களில் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்ந்தார்கள்.எனவே இறுதிக்கட்டப் போரின் போதும் தமிழ் ஜனத்தொகையில் பெரும் பகுதி போராட்டக்களத்துக்கு வெளியேதான் இருந்தது. அது தன்னுடைய வழமையான காரியங்களைச் செய்து கொண்டிருந்தது. இது ஒரு சமூக யதார்த்தம்.
நோலிமிட்டுக்கு போனவர்களை தையிட்டிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுடையது;ஊடகங்களுடையது; கருத்துருவாக்கிகள்,புத்திஜீவிகள்,மதத்தலைவர்கள்,செயற்பாட்டாளர்களுடையது.
தையிட்டியில் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கவனயீர்ப்பு போராட்ட வகைப்பட்டவை.அங்கே பெருந் திரள் மக்களை பெரும்பாலும் காண முடிவதில்லை.இதுதொடர்பாக முன்னணியின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.எனினும் எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தையிட்டி விவகாரத்தை தொடர்ச்சியாக ஏரியும் நிலையில் வைத்திருந்ததும் அந்த நெருப்பை தணியவிடாது பேணியதும் முன்னணிதான்.
அதேசமயம் ஏனைய தமிழ் கட்சிகளும் அந்த போராட்டத்தில் இணையும்போது அந்தப் போராட்டத்தில் அதிகரித்த மக்கள் பங்களிப்பை பார்க்க முடிந்திருக்கிறது. கடந்த 30 மாதங்களுக்கு மேலான காலப்பகுதியில் அவ்வாறு சில நாட்களில் அதிகரித்த தொகை மக்களை அங்கே காண முடிந்தது. அவ்வாறான நாட்களில் அது அனைத்துக் கட்சிப் போராட்டமாக,மக்கள் அமைப்புக்கள்,செயற்பாட்டாளர்கள் இணைந்த போராட்டமாக,பலமான எதிர்ப்பாகக் காணப்படுவதுண்டு.
அப்படி ஒரு எதிர்ப்புத்தான் கடந்த மாத இறுதியில் கட்டப்பட்டது.அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்தது விகாரை அமைந்திருக்கும் பிரதேசத்துக்குரிய உள்ளூராட்சி சபையாகும்.அந்த உள்ளூராட்சி மன்றம் அந்த விகாரைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி,அதற்காக போராட அழைப்பு விடுத்தது. அந்தப் போராட்டம் ஒரு விதத்தில் அனைத்துக் கட்சி போராட்டம்தான். வழமையாக அங்கே போராடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இந்தியாவில் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால், அக்கட்சியின் அடுத்தடுத்த நிலைத் தலைவர்கள்,தொண்டர்கள் அங்கே காணப்பட்டார்கள். சஜித் பிரேமதாசாவின் கட்சியைச் சேர்ந்தவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் யாரும் அங்கே இருக்கவில்லை. அதுவும் தையிட்டியில் ஒப்பீட்டளவில் அதிகம் பேர் திரண்ட ஒரு போராட்டம்.
அப்படித்தான் நேற்று நடந்த போராட்டமும். அங்கேயும் வழமையை விட அதிக தொகையினர் வந்திருந்தார்கள். எல்லாக் கட்சிகளும் இணைந்தால், மக்கள் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவர்களும் சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்தால்,அப்படிப் பெரிய அளவில் போராட முடியும் என்பதற்கு அது ஓர் ஆகப்பிந்திய உதாரணம். இந்த உதாரணத்தைப் பின்பற்றி போராட்டத்தை மேலும் மக்கள் மயப்படுத்தினால் அதிக சனத்தொகையை கொண்டு வர முடியும்.
கடந்த மாத இறுதியில் நடந்த போராட்டத்தை அரசாங்கம் பலப் பிரயோகத்தின் மூலம் அடக்க முற்பட்டது. அதன் விளைவாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்.அது பரவலாக எதிர்ப்பைக் கிளப்பியது.போராட்டம் அடக்கு முறையை வேகப்படுத்தும்.அடக்குமுறை போராடத்தைப் பலப்படுத்தும்;மக்கள் மயப்படுத்ததும். அப்படிப்பட்டதோர் பின்னணியில், நேற்றைய பௌர்ணமி நாளில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அது அதற்கு முதல் நடந்த போராட்டத்தை விடப் பெரியதாக அமையலாம் என்று அரசாங்கம் ஊகித்திருக்க முடியும்.
அவ்வாறு பெரிய அளவு போராட்டம் வெடித்தெழுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் தன்னுடைய முகவர்களின் ஊடாக சமூக வலைத்தளச் சூழலைப் பயன்படுத்தியது என்று காணி உரிமையாளர்களில் ஒருவராகிய பெண் சுட்டிக்காட்டுகிறார். மேலும், நேற்று நடந்த போராட்டத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு யாழ் அரச அதிபர் காணி உரிமையாளர்களை சந்தித்தார் என்ற தொனிப்படவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.மிகத் தெளிவாகப் பேசும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம்.
ஏனென்றால் கடந்த 15 மாதங்களாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. இந்த15 மாத கால பகுதிக்குள்ளும் அந்த விகாரை தொடர்பான நிர்ணயகரமான முடிவுகளை எடுக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை. முன்னைய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தையிட்டி விடயத்தில் ஒரு தீர்வைத் தரும் என்று தமிழ்மக்கள் நம்பக்கூடிய விதத்தில் எதுவும் நடக்கவில்லை.
ஆனால் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மிக முக்கிய விகாரைகளில் ஒன்று ஆகிய நைனா தீவு விகாரையின் அதிபதி போராடும் மக்களுக்குச் சாதகமாக கருத்துத் தெரிவிக்கின்றார்.சக்தி மிக்க மகாநாயக்கர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய கருத்துக்களைக் கூறுகிறார்.
அவருக்கும் தையிட்டி விகாரையின் அதிபதிக்கும் இடையில் ஏதோ முரண்பாடு உள்ளது என்பது ஏற்கனவே அவதானிக்கப்பட்ட ஒரு விடயம். எனினும் தமிழ்ப் பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்துக் கதைப்பது மிக அரிதான ஒரு புறநடை.
“டாண்” தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் சக்தி மிக்க பௌத்த மகா நாயக்கர்களை விமர்சிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதேசமயம் அந்த நேர்காணலின் ஊடாக தெரியவந்த மற்றொரு விடயம் என்னவென்றால்,நைனாதீவு விகாராதிபதியைப் போன்றவர்களின் கருத்துக்களை பலமான மகா சங்கங்கள் பொருட்படுத்தாது என்பதுதான்.
இவ்வாறு பெரும்பான்மைக்குள் காணப்படும் மிகச்சிறிய சிறுபான்மை எப்பொழுதும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்கும். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படும் பொழுது பெரும்பான்மையின் உணர்வுகள்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த அடிப்படையில் தையிட்டி விகாரையை அகற்றும் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்காது. அப்படி எடுத்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அது வாக்குறுதி அளித்த உண்மையான மாற்றத்தை தொடக்கி வைக்கிறது என்று பொருள்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.தையிட்டி போராட்டம் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. அது தனியாக ஒரு காணிப் பிரச்சினை மட்டுமல்ல. சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அது ஒரு மதப் பிரச்சினை மட்டுமல்ல. அவற்றை விட ஆழமான பொருளில் அது நிலப்பறிப்பு பற்றிய பிரச்சினை. அது அதன் இறுதி அர்த்தத்தில் ஓர் அரசியல் பிரச்சினை.எனவே அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு.அந்தத் தீர்வை முன்வைக்கத் தேவையான அரசியல் திட சித்தம் தேசிய மக்கள் சக்தியிடம் உண்டா?
தமிழ்த் தரப்பில்,அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள், அந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் எரியும் நிலையில் வைத்திருந்த அரசியல் கட்சிகள், செயற்பாட்டாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்களும் இணைந்து ஒரு கட்டமைப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். நில மீட்புப்புக்கான அந்தக் கட்டமைப்புத்தான் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.தனியே காணிச் சொந்தக்காரர்கள் அரச உயர் அதிகாரிகளோடு பேசுவதனால் அதைத் தீர்க்க முடியாது மட்டுமல்ல, அதனை வெறுமனே ஒரு காணிப் பிரச்சினையாகக் குறுக்குவதில் முடிந்து விடும்.
அது காணிப் பிரச்சினை அல்ல.அது இனப்பிரச்சினை.அது ஓர் அரசியல் பிரச்சினை.தனிய சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும்.இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த 15 மாதங்களாக தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத் தவறியிருக்கிறது. இனப்பிரச்சினை இல்லை,இனவாதம் இல்லை என்று திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,சட்டம் சகலருக்கும் சமம் என்று கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,தமிழ் மக்களுக்கு எங்கே துலக்கமான விதங்களில் மாற்றத்தைக் காட்டியிருந்திருக்க வேண்டுமோ அங்கே அந்த மாற்றத்தைக் காட்டத் தவறியிருக்கிறது.














