பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேலியகொடை, இக்கினிகஹபில்லேவ பகுதியில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மூன்று சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் களனி மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 24 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் கிராண்ட்பாஸ், பெர்குசன் வீதிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 820 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.














