முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று திருகோணமலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றை அண்மித்த தொல்பொருள் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட காணியில் தொல்பொருளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் புதிதான ஒரு கட்டுமானம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான முயட்சிகள் எடுக்கப்படுவதாக இதன்போது தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 2019,2020 காலப்பகுதியில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று அமைந்துள்ள பகுதியில் உள்ள புராதன இந்துக் கோவில்கட்டுமானப்பணி மற்றும் விகாரை கட்டுமானப்பணி தொடர்பிலான முறுகல் நிலை ஏட்பட்டு அதுதொடர்பான வழக்கின் தீர்பிற்கு அமைவாக பெளத்த விகாரை இருந்ததாக குறிப்பிடப்படும் பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அது தவிர்ந்த பிறிதொரு காணி ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு அங்கு பிள்ளையார் கோவில் அமைக்க முடியும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் நீதிமன்ற தீர்பின்போது எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு மாறான செயற்பாடொன்று குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அதுதொடர்பிலாக தாம் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது புராதன பெளத்த விகாரை அமையப்பெற்றதாக தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதியில் புதிதான கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தென்படுவதாகவும் அது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டிருப்பதாகவும் குறித்த வழக்கின் 2ம் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கடிதம் மூலம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதுடன், நீதிமன்ற விடுமுறைக்காலம் முடிவுற்றதும் இது தொடர்பாக நீதிமன்றிலும் முறையிடத்தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.














