தமிழ்நாடு பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் 7 வது பருவத்திற்கான இறுதி போட்டியில் வெற்றி பெற்று லைக்கா கோவை கிங்ஸ் அணி மீண்டும் மகுடம் சூடியுள்ளது.
திருநெல்வேலி ஐ.சி.எல்.,மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் கோவை கிங்ஸ் அணி தலைவர் ஷாருக்கான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லைக்காவின் கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களை குவித்தது.
அவ்வணி சார்பாக சுரேஷ் குமார் 57 ஓட்டங்களையும் முகிலேஷ் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுக்க, பந்து வீச்சில் நெல்லை அணி சார்பாக சோனு யாதவ், வாரியர் ஆகியோர் தலா இரு விக்கெட்களை சாய்த்தனர்.
இதனை தொடர்ந்து 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெல்லை றோயல் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
நெல்லை றோயல் கிங்ஸ் அணி சார்பாக அணித்தலைவர் அருண் கார்த்திக் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை குவிக்க லைக்காவின் கோவை கிங்ஸ் அணி சார்பாக சுப்ரமண்யன் 4 விக்கெட்களையும் ஷாருக்கான் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.
இதன் மூலம் இரண்டாவது ஆண்டாக லைக்கா கோவை கிங்ஸ் அணி தமிழ்நாடு பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளது.