2021 இல் முன்னெடுக்கப்பட்ட புதிய தொழில்துறை கொள்கையின் பிரகாரம் ஜம்மு காஷ்மீரில் ஒரு வருடத்தில் சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும் 10,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜே-கே தொழில்துறை துறைக்கு மொத்தம் 5,327 முதலீட்டு திட்டங்கள் வந்துள்ளன என்றும் இந்த திட்டங்களின் முதலீட்டுத் தொகை 66,000 கோடி என்றும் இது 1947 ஆண்டுக்கு பின்னர் கிடைக்கும் பெரிய முதலீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்துறை கொள்கையின் பிரகாரம் ஜம்மு காஷ்மீரின் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகையாக 28,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 20,000 கோடி முதலீட்டுக்காகும் மற்றும் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரை ஒரு பிரச்சனைக்குரிய பகுதியாகக் கருதும் எவருக்கும் இப்பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் நம்பிக்கை கொடுத்துள்ளது. 2019 ஓகஸ்டில் 370 வது பிரிவு இரத்து செய்யப்பட்டதிலிருந்து, அங்கு தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, சுற்றுலா, விவசாயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல திட்டங்களை செயற்படுத்தும் வகையில் ஜே-கே உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் 13 ஆயிரத்து 732 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் டுபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவின் தயாரிப்பாளர்கள், ஸ்ரீநகரின் புறநகரில் ஒரு வணிக வளாகம் மற்றும் பல்நோக்கு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை மேற்கொண்டனர். இது முதல் வெளிநாட்டு நேரடி முதலீடாகும்.
இதேநேரம் நிதின் கட்கரி தலைமையிலான வீதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சு 1.3 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஜம்முவில் ஒன்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு AIIMS மருத்துவமனைகளின் ஒப்புதலுடன், தொழில்துறை வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயமும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இலட்சியத் திட்டம் காரணமாக 450,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.