ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசியக்கட்சியையும் ஒன்றாக இணைந்து, அரசாங்கமொன்றை ஸ்தாபித்து, அந்த அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”மொட்டுக் கட்சியினருக்கு நாம் ஒன்றைக் கூறுகிறோம். நீங்கள் நினைப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் செய்ய மாட்டார்.
இந்த நாடாளுமன்றத்தை கலைத்து, முதலாவதாக நாடாளுமன்றத் தேர்தலையே ஜனாதிபதி நடத்துவார்.
ஐக்கிய மக்கள் சக்தி, பொதுத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், ஐக்கிய தேசியக் கட்சியை இணைந்து அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே அவரின் நோக்கமாகும்.
இந்த அரசாங்கத்தின் கீழ், ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் களமிறங்கவே அவர் தற்போது திட்டம் போட்டுள்ளார்.
அதேநேரம், ஜே.வி.பியின் பலம் கிராம மட்டத்தில் குறைந்துவிட்டதாக மொட்டுக் கட்சி தற்போது நினைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அடுத்த தேர்தலில் நிச்சயமாக ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றே ஸ்தாபிக்கப்படும்.
இந்த அரசாங்கம், ராஜபக்ஷக்களுக்கும் திருடர்களுக்கும் எதிரான அரசாங்கமாகவே இருக்கும்.
ஆட்சியமைத்தவுடன், ராஜபக்ஷவினர் கொள்ளையடித்த சொத்துக்களை நிச்சயமாக அபகரிப்போம்.
எனவே, இனியும் கொள்ளையடிக்க வேண்டாம் என நாம் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.”- என்றார்.