மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டில், சதம் அடித்ததன் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 143 ஓட்டங்களுடனும் விராட் கோஹ்லி 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.
முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தற்போது இந்தியக் கிரிக்கெட் அணி, 162 ஓட்டங்கள் முன்னிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இப்போட்டியின் இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் அறிமுக வீரராக களம் கண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து அணிக்கு வலுவான ஆரம்ப இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து 229 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக்கொண்டனர். இதன்போது தனது 10ஆவது டெஸ்ட் சதத்தை அடித்த ரோஹித் சர்மா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2013ஆம் ஆண்டுக்கு பிறகு சதம் கடந்தார்.
இதேபோல மறுமுனையில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெளிநாட்டில் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
அத்துடன் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 17ஆவது இந்தியக் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கும் உரித்துடையவரானார். அவர் தனது முதல் டெஸ்டில் மூன்று புள்ளிகளைப் பெற்ற நான்காவது இளைய இந்தியர் ஆவார்.
ஜெய்ஸ்வால்- ரோஹித்தின் 229 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பதிவு செய்த அதிகபட்ச இணைப்பாட்டமாகும்.
இதற்கு முன் 2002ஆம் ஆண்டு மும்பையில் வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 201 ஓட்டங்களை சேர்த்ததே சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
215 பந்துகளில் சதம் அடித்த ஜெய்ஸ்வால், இடது கை துடுப்பாட்ட வீரராக சதம் அடித்த அறிமுக வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இறுதியாக 2021ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தார்.
13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வெளியே சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால், பெற்றார். 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சுரேஷ் ரெய்னா, இந்தியாவுக்கு வெளியே அறிமுக போட்டியில் 120 ஓட்டங்களை பெற்றார்.
இப்போட்டியில் தனது 10வது டெஸ்ட் சதத்திற்குப் பிறகு ரோஹித் சர்மா ஆட்டமிழந்திருந்தாலும், ஜெய்ஸ்வால் ஒரு தனித்துவமான சாதனையை அடைய நாள் முழுவதும் துடுப்பெடுத்தாடினார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிக பந்துகளை சந்தித்த இந்திய அறிமுக வீரர் என்ற சாதனையை முறியடித்தார்.
ஜெய்ஸ்வாலின் சதம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வீரேந்திர சேவாக் 101 ஓட்டங்களுக்குப் பிறகு 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவிற்கு வெளியே அறிமுகமான முதல் 100 ஓட்டங்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற வழிவகுத்தது.