வடகிழக்கு பிராந்தியமான சிக்கிமில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி தனது ஆதரவை அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த சேவை வழங்கல் மற்றும் ஊரகப் பொருளாதாரங்களுக்கான புதுமை திட்டதிற்கு உலகவங்கி அடுத்த ஆண்டு நிதியளிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.
மொத்தம் $269.74 மில்லியன் செலவில் விவசாயம் அல்லாத துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை உண்டாக்கும் வகையிலான இந்த திட்டதிற்கு உலக வங்கி 100 மில்லியன் கடனாக வழங்கும்.
கிராமப்புறங்களில் குறிப்பாக விவசாயத் துறைக்கு வெளியே உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் சமூக-பொருளாதார நிலையை மாற்றியமைப்பதில் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த ரோகினி பிரதான் எடுத்துரைத்தார்.
7,096 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இமயமலை மாநிலமான சிக்கிம், இந்திய அரசின் கிழக்குக் கொள்கையின் கீழ் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானவையாக உற்பத்தி, சேவைகள் குறிப்பாக சுற்றுலா, மருந்துகள் மற்றும் நீர்மின்சாரம் போன்ற துறைகள் ஈர்க்கக்கூடிய வளர்ச்சி விகிதங்களைக் காட்டினாலும், அதற்கேற்ற வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
15-59 வயதுக்குட்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் விவசாயம் மற்றும் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுகின்றனர். அத்தோடு இளைஞர்களில் சுமார் 41 சதவீதம் பேர் இன்னும் விவசாய வெளிகளிலேயே ஈடுபட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அபிலாஷைகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையில், சிக்கிம் அரசாங்கம் வளர்ந்து வரும் துறைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் வலுவடைய செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.