நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில் சங்கிலியன் தோரண வாசலைப் புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரதீப் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் ,சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் ஆறு திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் யு.ஏ.பந்துலஜீவவும் கௌரவ விருந்தினர்களாக யாழ் மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டது.
மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயற்றிட்டம் இதுவாகும்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், அரசியல் தலைவர்கள், மூத்த கல்விமான்கள், தொல்லியல் துறை உத்தியோகத்தர்கள், தொல்லியல் மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவை தொடர்ந்து மந்திரி மனை அரங்கில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.