இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு இணையற்றதாகவும், விலைமதிப்பற்றதாகவும் இருக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற பிளாஸ்டிக் தொழில் வளர்ச்சிக்கான இரண்டாவது தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர், பிளாஸ்டிக் துறை சமீபத்திய ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்றும் அது மேலும் வளர்ச்சி அடைவதற்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு வரை நாட்டின் ஏற்றுமதி சுமார் 500 மில்லியன் டொலர்களாக இருந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிலைமை மாறி, ஏற்றுமதித் துறையில் நாடு 776 மில்லியன் டொலரை தொட்டுள்ளது என்றும் பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு 12 பில்லியன் என்றும் கூறினார்.
இந்தத் துறையானது வணிக வாய்ப்புகள், இளம் தலைமுறையினருக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்றும் தரத்தின் முக்கியத்துவம் பேணப்படும் என்றும் இந்தத் துறையில் தரமற்ற உற்பத்தியை ஏற்காமல் குறைந்த செலவில் இதை அடைய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தொழில்துறையின் சாத்தியக்கூறுகள் மற்றும் தொழில்துறையின் சிக்கல்கள் குறித்து அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் பியூஷ் கோயல் நிலையான வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற பிளாஸ்டிக் தொழில் வளர்ச்சிக்கான இரண்டாவது தொழில்நுட்ப மாநாட்டில் தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.