இந்திய மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான காணொளி காட்சிகளை நீக்குமாறு, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிடம், கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மணிப்பூரில் இடம்பெற்ற கலவரம் மற்றும் இரண்டு பெண்கள் மீதான வன்முறை சம்பவத்திற்கு அரசியல் மற்றும் சமூக ரீதியில் உலகளாவிய ரீதியில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய உயர்நீதிமன்றம் கடும் கண்டணம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்திற்கு இந்திய மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நடவடிக்கைகளை எடுக்க தவறினால் உயர்நீதிமன்றம் குறித்த விடயம் தொடர்பில் நேரடியாக தலையிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வீட்டின்மீது, அந்தப் பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.