சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு அரசியலுக்கு அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாக இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஐ முழுமையாக அமுல்படுத்த, தன்னால் ஒரு வாக்கினை மட்டும் வைத்துக் கொண்டு முடியாது என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.
அது சரி. அவரால் மட்டும் தனியாக இதனை மேற்கொள்ள முடியாது. அவருக்கு மக்கள் ஆணையும் கிடையாது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, மஹிந்தவின் 13 பிளஸ் என இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன.
அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு இவை கொண்டுவரப்பட்ட காரணத்தினால்தான், இவை தோல்வியடைந்தன.
ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு அரசியலுக்கு அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாக இருக்கிறது.
தமிழ் மக்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
நாம் இவர்களை மாற்றமடையுமாறு வலியுறுத்த முடியாது. அப்படி மாறும்படி கோரினால் பிரச்சினைகள்தான் ஏற்படும்.
இல்லாவிட்டால் நாம் மாற வேண்டும். நாம் எவ்வாறு மாற்றமடையப் போகிறோம் என்பதை விவாதிக்க இந்த நாடாளுமன்றுக்கோ ஜனாதிபதிக்கோ மக்கள் ஆணைக் கிடையாது.
எனவே, புதிய நாடாளுமன்றமும் புதிய மாகாணசபையும், புதிய அதிகாரமும் தேவைப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.