வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் நட்புரீதியான மற்றும் பயனுள்ள இருதரப்பு விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து – பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு, இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.