அமெரிக்காவிலுள்ள பல்வேறு வைத்திய சாலைகளின் இணையத்தளங்களின் மீது நேற்றையதினம்(04) சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலைகளின் தகவல்களைத் திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், பின்னர் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சைபர் தாக்குதல்களுக்குள்ளான நோயாளிகள் ஏனைய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.