கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு, மருதமுனைஆகிய ,பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டுயானைகள் சுற்றுமதில் பயனுள்ள மரங்கள், மற்றும் தோட்டங்களை துவம்சம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக என்றுமில்லாத வகையில் இன்று(9) காலை மருதமுனை பகுதியில் தனியன் காட்டுயானை ஒன்று அட்டகாசம் புரிந்துவருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணியளவில் நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மக்கள் குடியிருப்பு நிறைந்துள்ள பகுதிக்குள் நுழைந்த குறித்த காட்டுயானை அங்குள்ள வீட்டு மதில் மற்றும் வாழை, பலா உட்பட பயனுள்ள மரங்களையும் துவம்சம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் குறித்த யானை நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உறக்கமின்றி விழித்திருப்பதாகவும் இதனால் பல்வேறு உடல் உள உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே காட்டு யானைகளை விரட்டுவதற்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.