மீரிகம – வில்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 4 பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மீரிகம – வில்வத்த ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் நேற்று கொள்கலன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் உயிர்சேதம் எதுவும் இடம்பெறாத நிலையில், ரயிலின் இயந்திரம் மற்றும் சில்லுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து ஆராய்வதற்காக 4 பேர் கொண்ட விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் அறிக்கையின் பின்னர், விபத்துக்கான காரணம் தொடர்பாக, வெளிப்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உதவி பொதுமுகாமையாளர் என்.ஜே இதிபொலகே தெரிவித்துள்ளார்.
மீரிகம – வில்வத்த ரயில் கடவையில் பொல்ஹாவெலவில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த அலுவலக ரயிலுடனேயே கொள்கலன் லொறி மோதியது.
குறித்த சந்தர்ப்பத்தில், கொள்கலன் லொறியின் சாரதி அதிலிருந்து இறங்கியமையினால் அவர் உயிர் தப்பியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தை அடுத்து அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமும் அங்கிருந்த ஏனைய சிலரிடமும் பொலிஸார் தற்போது வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.