நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆகஸ்ட் 5, அன்று, இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் நிலையான வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி பயணிக்கின்றது.
பல ஆண்டுகளாக, பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் தொடர்வது சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு இடையூறாக இருப்பதாக கவலைகள் இருந்தன.
சட்டப்பிரிவு 370இரத்து செய்யப்பட்டதன் மூலம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற முற்போக்கான சட்டங்களின் அனைத்து விதிகளையும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயன்படுத்த அனுமதித்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னரான சூழலில் ஜம்மு காஷ்மீரின் நிலைமைகளை பேராசிரியர் துர்கேஷ் கே ராய் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடைய கூற்றுக்கு அமைவாக சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2020 இன் தொடக்கத்தில் உலகளாவிய கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்டது, இதனால் ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான பல கொள்கை நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தும் இந்திய அரசாங்கத்தின் திறனை சற்றே கட்டுப்படுத்தியது.
இருப்பினும், ஒட்டுமொத்த பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்துவிட்ட நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தது. 2022ஆம் ஆண்டில் 18.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது 75 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
இதனால் சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் போன்றவற்றுடன் தொடர்புடைய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.
பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு பல்வேறு அனுபவங்களை வழங்கவும், ’75 புதிய இடங்கள், 75மதத் தளங்கள், 75 புதிய கலாசார பாரம்பரிய தளங்கள் மற்றும் 75 புதிய தடங்கள்’ ஆகியவை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதேநேரம், சமீப காலங்களில், ஜம்மு, காஷ்மீரலிருந்து விவசாய ஏற்றுமதி 55சதவீதம் அதிகரித்துள்ளது. யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு அப்பிள் விவசாயம் கணிசமாக பங்களிக்கிறது, மேலும் இது நாட்டின் மொத்த அப்பிள் உற்பத்தியில் 75சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
அதேநேரத்தில், மலர் வளர்ப்புத் துறையும் இப்பகுதியில் தொடங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் லாவெண்டர் போன்ற மருத்துவ தாவரங்கள் சர்வதேச சந்தைகளில் அதிகம் விரும்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.